சென்னையில் கடந்த 3-ந்தேதி பிராமண சமூகத்தினர் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது தெலுங்கு மக்கள் குறித்து அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானார். அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.