சைக்கிள் ஓட்டும் போது மொபைல்போன் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை என ஜப்பான் நாட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். கடந்த சில தினங்களாக, சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது.
கடந்த ஆண்டு மட்டும் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துக்கள் நடந்துள்ளன. இது நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும். சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சைக்கிள் ஓட்டும் போது பெரும்பான்மையினர் மொபைல் போன் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
சைக்கிள் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுவது அல்லது இணையத்தை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மதுபோதையில் சைக்கிள் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2.75 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.