2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டடத்தின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பான கோப்பு 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
2016ஆம் ஆண்டு ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்த பிறகு, அமைச்சர் ஒப்புதல் வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே, வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது. மேலும் சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.