உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த 12-ந்தேதி யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனுக்கு இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடலாம் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோரின் அனுமதியுடன் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு இடது கண்ணிற்கு பதிலாக வலது கண்ணில் சிகிச்சை செய்யப்பட்டதை பார்த்த அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்தனர். புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.