ஈரோட்டில் இன்று மதியம் பெய்த திடீர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோட்டில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறு சிறு தூறல்கள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து மதியம் சுமார் 2.30 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், மரப்பாலம், இடையன் காட்டு வலசு,
ரயில் நிலைய சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்த படி சென்றன. மேலும், சின்ன மார்க்கெட் ,சாஸ்திரி நகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.