கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இன்று வழக்கம்போல், நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு வழக்குகளுக்காக வந்திருந்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் மர்ம நபர் ஒருவர் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஜே எம் 2-ல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வெட்டுக் காயங்களுடன் இருந்த வழக்கறிஞர் கண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வழக்கறிஞர் கண்ணனை வெட்டியது, ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி செய்து வந்த ஆனந்தன் என்பதும், இவரது மனைவியும் வழக்கறிஞராக பணி செய்து வருவதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எஸ் பி தங்கதுரை சமாதானம் பேசியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
கண்ணனுக்கும், ஆனந்தனுக்கும் ஏற்கெனவே இருந்த முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.