வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு- இலங்கை கடலோரத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்தம் தீவிரமடைந்து வருவதால், நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.