கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில், 14 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதியில் உள்ள பாபுசாப்பாளையாவில் நேற்று மாலை கனமழை பெய்தது. அங்கு புதிதாக கட்டப்பட்டு வந்த ஆறு மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு தொழிலாளி, தலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். கட்டடத்தில் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
தீயணைப்புப் படையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டடத்தின் இடிபாடுகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். இரவு முழுவதும், 14 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.