எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையங்களில் தாம்பரம் ரயில் நிலையமும் ஒன்று. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் இரண்டு நபர்கள் வெடிகுண்டு வைக்க திட்டமிடுவதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீஸார், தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், அலுவலகங்கள், நடைமேடை என அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு வைக்கப் போவதாக வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.
தொலைபேசியில் பேசிய நபரின் எண்ணைக் கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.