யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் இர்பான் பகிர்ந்துள்ளார். இர்பானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில், யூடியூபர் இர்பான் அறுவை சிகிச்சை அரங்குக்குள் அத்துமீறி நுழைந்து பிரசவத்தை வீடியோ பதிவு செய்ததும், மருத்துவர் நிவேதிதா முறையாக பயிற்சி பெறாத நபரிடம் கத்திரிக்கோலை கொடுத்து தொப்புள் கொடியை வெட்ட வைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து யூடியூபர் இர்பான் மற்றும் மருத்துவர் நிவேதிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.