ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (22 அக்டோபர்) அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷ்யா-உக்ரைன் இடையேயான பிரச்சனைகளுக்கு இந்தியா நல்ல தீர்வுகளை தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
BRICS உச்சிமாநாட்டின் கூட்டத் தொடரில் இரண்டு தலைவர்களும் சந்தித்து,கட்டியனைத்தனர்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட BRICS கூட்டமைப்பின் உச்சிமாநாடு ரஷ்யாவின் கசானில் நடைபெற்று வருகிறது.
“ரஷ்யா-உக்ரைன் பிரச்சனையில் இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படலாம் என்பதே எங்களின் நிலையாகும். பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் உதவ தயாராக உள்ளது,” என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த BRICS உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.