சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை நோயாளி ஒருவரின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது தாய் பிரேமா நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து கிண்டி மருத்துவமனையில் பிரேமா அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் பாலாஜி தான் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனாலும், அவருக்கு குணமாகவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து வீட்டில் பிரேமாவுக்கு அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு இதற்கு முன்னர் எடுத்த மருந்துகள் காரணமாக பக்க விளைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து கிண்டி மருத்துவமனைக்குச் சென்ற விக்னேஷ் மருத்துவர் பாலாஜியிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதற்கிடையில் தனது தாய் வலியால் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் வீட்டில் இருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவமனைக்குச் சென்று பாலாஜியை தாக்கியுள்ளார்.
எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்கள்.. ஆனால் என் அம்மாவுக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என போலீசாரிடம் விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.