தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை, வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் ரமணி(23). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
அதேப் பகுதியைச் சேர்ந்த மதன் (30) என்பவர் ரமணியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது பெற்றோரிடம் கூறி பெண் கேட்கச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து ரமணியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்ட போது ரமணிக்கு மதனை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என ரமணியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தபோது உள்ளே புகுந்து அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார் .
உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார் .
இந்த கொலை சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.