சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பீரோவை உடைத்து 49 பவுன் தங்க நகைகள் மற்றும் 22 கிலோ 800 கிராம் வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனை அடுத்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றவாளிகளை பிடிப்பதற்காக திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் படி, திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில், சக்திவேல், ராஜவேல், ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனிப்படையினர் கடந்த இரண்டு வாரங்களாக குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் தென்மாபட்டு பிரிவு ரோட்டில் சென்ற 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை அடுத்து, அவர்களிடம் போலீசார் கிடக்கு பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது, தேனியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் சோனிராஜா (58), மற்றும் மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் அழகர்சாமி (35) ஆகியோர் கண்டாரமாணிக்கத்தில் நடைபெற்ற திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் இவர்கள் திருடிச் சென்றதில் 43 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள், ரூபாய் 65 ஆயிரம் பணம், திருட்டுக்கு ஈடுபடுத்திய போலி எண் கொண்ட இருசக்கர வாகனம் மற்றும் லாக்கர் பீரோவை உடைப்பதற்கு பயன்படுத்திய கடப்பாரை, ஸ்க்ரு டிரைவர், மீட்டனர்.
இந்நிலையில் சோனி ராஜா மீது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 140 – வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வீட்டில் திருட்டில் ஈடுபடுவதற்கு வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும், செட்டிநாட்டு லாக்கர் மற்றும் எப்படிப்பட்ட லாக்கரையும் உடைப்பதில் வல்லவராகவும் திகழ்ந்தவர் சோனிராஜா என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஒரு வாரமாக திருக்கோஷ்டியூர் வீட்டை நோட்டமிட்ட சோனிராஜா, தனக்கு உதவியாக அழகர்சாமி என்பவரை அழைத்து அவருக்கு ஜாக்கி என பெயர் வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் தொடர் வீடாக இருந்தால், அனைத்து வீடுகளுக்கும் நடிகர் வடிவேல் பாணியில் பூட்டு போட்டுவிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வழக்குகளில் வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா என்ற விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை இரண்டு வாரங்களில் பிடித்து, அவர்களிடமிருந்து தங்கம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த சிறப்பு தனிப்படை போலீசார் சக்திவேல், ராஜவேல், சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துராஜ், காவலர்கள் ஜெகதீஷ், ஜெயராஜ், ரமேஷ், ஆனந்த் மற்றும் திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் செல்வராகவன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு பேரில், திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.