நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், காலை 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின்பு, அவை மீண்டும் கூடியது. அப்போது மணிப்பூர் கலவரம் பற்றியும் அதானி லஞ்ச விவகாரம் பற்றியும் அவையில் உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். அதுபற்றி பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால், அவையில் கூச்சலும், குழப்பமும் காணப்பட்டது.
இதன் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.