தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெற்றது. இதில் திமுக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும். பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக எப்போதும் முன்னெடுக்கும்.
மக்கள் மனங்களில் நாம் முன்வைக்கின்ற கொள்கைகள் தங்களுக்கான பாதுகாப்பைத்தான் பேசுகின்றன என்ற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கைகளுக்கு “மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்” என்று பெயர் சூட்டியுள்ளது என்பதை விளக்க வேண்டியது நம் கடமை ஆகும். தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் என்பதையும் இந்தச் செயற்குழு வாயிலாக மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சித் தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள ஒன்றிய பாஜக அரசின் இந்தச் சட்டத்தை, இச்செயற்குழு கண்டிக்கிறது. ஜனநாயக நாட்டில் உண்மையான மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஆளும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று. உண்மையான. நேர்மையான கருத்துகளைத் தெரிவிப்பதும் மக்களுக்காகப் போராடுவதும் எதிர்க் கட்சிகளின் கடமை மட்டுமல்ல. உரிமையும் ஆகும். அத்தகைய உரிமையை, அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வாயிலாகத் தடுக்க முயல்வதும், ஊடகங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுப்பதும், சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல்கள் சார்ந்து அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகுமுறை. இத்தகைய அரசியல் அணுகுமுறையை, தமிழகத்தைத் தற்போது ஆளும் திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பாரபட்சமின்றி, கடும் தண்டனைகளை நீதிமன்றங்கள் வாயிலாக உடனடியாகப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளைத் தீர்க்கமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கச் சென்னையைப் போன்று. கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகர நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள். குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல் இருக்கிறது என்றால், ஓர் இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி. ஒரு சிறப்புப் பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியைச் சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழுச் சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியும். எனவே கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.